தேசிய செய்திகள்

எஸ்.ஐ.ஆர். போராட்டத்தில் பெண்களிடம் பாலியல் வன்முறை; டெல்லி காவல் தலைமையகம் நோக்கி மகளிர் குழுக்கள் பேரணி

அகில இந்திய ஜனநாயக மகளிர் கூட்டமைப்பு, இந்திய மகளிருக்கான தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய முற்போக்கு மகளிர் கூட்டமைப்பு மற்றும் பிற மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

புதுடெல்லி

எஸ்.ஐ.ஆர். போராட்டத்தில் பெண்கள் பாலியல் வன்முறை தொடர்பான விவகாரத்தில், டெல்லி காவல் தலைமையகம் நோக்கி மகளிர் குழுக்கள் பேரணியாக சென்றனர்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர்

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று, மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ந்தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

விரிவான அறிக்கை

இந்த போராட்டத்தின்போது, டெல்லி போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று பெண் பத்திரிகையாளர்கள் 3 பேர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதுபற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து டெல்லி காவல் ஆணையாளருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கிளப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது. போராட்ட செய்தியை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்களை போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புகார் மீது, டெல்லி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. இந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் புகார் தொடர்பாக புதுடெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் குழுக்கள்

எஸ்.ஐ.ஆர். போராட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை மற்றும் போலீஸ் தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மகளிர் குழுக்கள் இன்று டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இதில், அகில இந்திய ஜனநாயக மகளிர் கூட்டமைப்பு, இந்திய மகளிருக்கான தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய முற்போக்கு மகளிர் கூட்டமைப்பு மற்றும் பிற மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

SCROLL FOR NEXT