புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் பல லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும். இந்த யாத்திரை மொத்தம் 57 நாட்கள் நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். புதுடெல்லியில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல், மத்திய உள்துறை செயலாளர், ராணுவத்தளபதி, உளவுத்துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர், மத்திய ஆயுதக் காவல் படைகளின் இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு, தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார். ட்ரோன்கள், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், இதர நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்தியக் காவல்படைகள் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து யாத்திரை மேற்கொள்ளும் பகுதிகளில் பல்லடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
யாத்திரை செல்லும் பக்தர்களின் பதிவுகள், தங்குமிடம், சுகாதார வசதிகள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் போதிய முன்னேற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு முகமைகளுக்கு அமித்ஷா வலியுறுத்தினார்.