தேசிய செய்திகள்

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோவிலில் பக்தர்களிடம் கெடுபிடி காட்டக்கூடாது - காவலர்களுக்கு டி.ஐ.ஜி. அறிவுரை

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் அமைந்திருக்கும் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் தனிசன்னதியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். சனிப்பெயர்ச்சி நேரத்தை கணக்கிட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற உள்ளன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வரும் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த 200 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பக்தர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது என்று காவலர்களிடம் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் அறிவுறுத்தினார்.