சிம்லா,
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் ஓய்வூதியதாரர் ஒருவரிடமிருந்து ரூ.81,800 பணத்தைப் பறித்துச் சென்ற குரங்கு ஒன்று, மரத்தின் உச்சியிலிருந்து ரூபாய் நோட்டுகளை மலைச்சரிவில் வாரி இறைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த வியாழக்கிழமை அன்று முதியவர் ஒருவர் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.81,800 பென்சன் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று முதியவரின் கையில் இருந்த பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு ஓடியது.
பணத்துடன் அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சிக்கு சென்ற அந்த குரங்கு, பணக்கட்டைப் பிரித்து அதிலிருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கீழே இருந்த மலைச்சரிவில் வாரி இறைத்தது. மரத்திலிருந்து ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழிவதைக் கண்ட அப்பகுதி மக்களும், அலுவலக ஊழியர்களும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
முதியவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ஊழியர்களும், பொதுமக்களும் மலைச்சரிவில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் துரித நடவடிக்கையால் பெரும்பாலான பணம் மீட்கப்பட்டு முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், குரங்கு சில 500 ரூபாய் நோட்டுகளைக் கிழித்து சேதப்படுத்தியதாலும், சில நோட்டுகள் காற்றில் பறந்து மாயமானதாலும் முதியவருக்கு சுமார் ரூ.1,500 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சிம்லா நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியைய்டும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.