புதுடெல்லி
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனினும், இந்திய கப்பல்களுக்கு ஈரான் எந்த நெருக்கடியையும் அளிக்கவில்லை. அவை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், எம்.டி. சர்வ சக்தி என்ற பெயரிடப்பட்ட மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று 46,313 டன் சமையல் எரிவாயுவை சுமந்து கொண்டு, ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று பாதுகாப்பாக கடந்து வந்துள்ளது.
அந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 20 ஊழியர்கள் உள்ளனர். இந்த கப்பல் விசாகப்பட்டினத்திற்கு வருகிற 13-ந்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.