தேசிய செய்திகள்

ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த கப்பல்கள்; 92,700 டன் எல்.பி.ஜி.யுடன் இந்தியாவை வந்தடைவது எப்போது? வெளியான தகவல்

பெர்சிய வளைகுடாவில் உள்ள அனைத்து இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

புதுடெல்லி

மேற்காசிய மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ள சூழலில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் கடல்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்களும் கடந்துள்ளன.

அந்த கப்பல்களில் 92,700 டன் எடை கொண்ட எல்.பி.ஜி. எனப்படும் திரவ நிலையிலான பெட்ரோலியம் கியாஸ் உள்ளது. 2 கப்பல்களும் முறையே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும்.

இதுதவிர, இந்திய கொடியுடன் கூடிய 22 கப்பல்கள், மொத்தம் 611 கப்பல் பணியாளர்களுடன் உள்ளன என்றார். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கப்பல் உரிமையாளர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார்.

பெர்சிய வளைகுடாவில் உள்ள அனைத்து இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், எந்த அசம்பாவித சம்பங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.