டெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இதனிடையே, ஏஐ உச்சி மாநாட்டின் கடைசி நாளான கடந்த 20ம் தேதி மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கண்காட்சி அரங்கிற்குள் சட்டையை கழற்றி பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஏஐ கண்காட்சி அரங்கில் போராட்டம் நடத்திய சம்பவத்தில் 8 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில், ஏஐ கண்காட்சி அரங்கில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 3 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் பதுங்கி இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுரவ், சித்தார்த், அர்பஸ் ஆகிய 3 பேரையும் டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம் நடத்தி கைதான காங்கிரசாரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.