தேசிய செய்திகள்

சிவசேனா உறுப்பினர் தாக்கிய விவகாரம்; வேலையே வேண்டாம் என நகரை விட்டு வெளியேறிய டாக்டர்

ஆண் டாக்டர் அச்சத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நகரை விட்டு வெளியேறி உள்ளார்.

புனே

மராட்டியத்தில் சிவசேனா உறுப்பினர், ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட டாக்டர் வேலையே வேண்டாம் என நகரை விட்டு வெளியேறினார்.

மராட்டியத்தில் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக சிருஷ்டி பவிஸ்கார் வேலை செய்து வருகிறார். இவருடன் டாக்டர் வைபவ் சலுங்கே என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த மருத்துவமனையில் புதிதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இடவசதி இல்லை

ஆனால் அந்த மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை. இதனால், மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் உறவினர்களிடம் பெண் டாக்டர் சிருஷ்டி கூறியுள்ளார்.

ஆனால், அவர்களோ ஆத்திரமடைந்து நாங்கள் தாதாவை கூப்பிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் சிவசேனா (ஷிண்டே அணி) மாநகராட்சி உறுப்பினரான ரமேஷ் மாத்ரே என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

வீடியோ வைரல்

அப்போது பெண் டாக்டர் சிருஷ்டி, மறுபக்கம் திரும்பி மொபைல் போனில் யாருடனோ பேசியபடி இருந்துள்ளார். இதனால், மாத்ரே வந்தபோது அவரை கவனிக்கவில்லை. அப்போது ஆத்திரத்தில் இருந்த மாத்ரே, பின்னால் இருந்து பெண் டாக்டரை தாக்கினார். இதனால், அவர் கையில் இருந்த போன் கீழே விழுந்தது. அதிர்ச்சியில் அவர் திரும்பினார்.

இதன்பின்னர் அவரும், அவருடைய ஆதரவாளர்களும் டாக்டர் சலுங்கேவை 15-க்கும் மேற்பட்ட முறை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த சூழலில், மாத்ரேவை போலீசார் நேற்று கைது செய்தனர். எனினும், அவர் உடல்நல குறைவால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலை ராஜினாமா

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆண் டாக்டர் அச்சத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நகரை விட்டு வெளியேறி உள்ளார்.

அவர் கூறும்போது, வேலையை ராஜினாமா செய்து விட்டேன். பயமே அதற்கு காரணம். ரவுடிகள் எங்களை கண்காணித்து கொண்டு இருக்கின்றனர். நான் நகரை விட்டே வெளியேறி விட்டேன். அவர்கள் மிக ஆபத்து நிறைந்தவர்கள். மற்ற டாக்டர்கள் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் வேலை செய்யலாம். ஆனால் நான் வேலை செய்யமாட்டேன். மீண்டும் வேலைக்காக அந்த மருத்துவமனைக்கு நான் செல்லமாட்டேன் என்றார்.