தேசிய செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி செய்து வருகிறது.

பெங்களூரு,

தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் வறட்சி

ஆனால் கர்நாடகா அரசு, காவிரி நீரை முறையாக தமிழகத்துக்கு வழங்குவதில்லை. போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. என்று காரணம் காட்டி காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடுவதில்லை.

இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக சட்டசபையிலும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை

பிரதமர் மோடியிடம் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளை தடுப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் ஆகியோருடன் ஏற்கனவே விரிவான ஆலோசனை நடத்தி இருந்தார்.

விஜய் கர்நாடகா பயணம்

இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ம் தேதி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அழைப்பை ஏற்று செல்லும் அவர் அங்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதனை அமைச்சர் வினோத் இன்று உறுதி செய்துள்ளார்.

இணைந்து பணியாற்ற தயார்

இந்தநிலையில், மேகதாவில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது தொடர்பான கர்நாடகாவின் திட்டம் குறித்து, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும் இடையே ஒரு சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மாநில அரசு அனைவருடனும் பேசவும், விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இணைந்து பணியாற்றவும் தயாராக இருப்பதாக கர்நாடகா முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறினார்.

இது தொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது. விஜய் பெங்களூருவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது தற்காலிகமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நான் இப்போது அதை வெளியிட விரும்பவில்லை.

அடுத்த வாரம் எனது அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நான் மிகவும் பிசியாக இருக்கிறேன். நாங்கள் அனைவருடனும் பேசவும், அனைவருடனும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அனைவருடனும் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.