தேசிய செய்திகள்

மணமேடையில் மணமகனுக்கு அதிர்ச்சி - காதலன் கழுத்தில் மாலையை போட்ட மணப்பெண்... வீடியோ வைரல்

மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

சிந்த்வாரா,

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது, மணமகன் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டிய மணப்பெண், தனது காதலன் கழுத்தில் மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு திருமண விழாவில், மணமக்களுக்கு இடையே மாலை மாற்றும் வைபவம் மிக விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருந்த போது, மணப்பெண் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார்.

அனைவரும் மாலை மாற்றும் நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, மணப்பெண் திடீரென மேடையிலிருந்து கீழே குதித்து கூட்டத்திற்குள் ஓடினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனது காதலனின் கழுத்தில் மாலையை போட்டார். இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள், அந்த வாலிபரை (காதலனை) பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரைக் காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.