தேசிய செய்திகள்

ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ

ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் வெளியேற வில்லை என்றால், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

ஐதராபாத்

வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம், பீகார் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில், அருகில் உள்ள அசாம் மாநிலத்திற்கு ஏராளமானோர் குடியேறி வசிப்பதாக, புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாநில மக்களுக்காக வரைவுப் பதிவேடு ஒன்றை தயாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி, தற்போது அந்த வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த மாநில மக்கள் தொகையில், 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளது. 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று விடுபட்டுள்ளது இது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக மீது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் ஒரே நாட்டின் மக்களை பிளவுபடுத்த உதவும் என்றும், இத்தகைய பிரிவினைவாத அரசியலை பாஜக கைவிட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, தேசநலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தெலுங்கானா பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜா சிங் கூறும் போது ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் இந்தியாவை விட்டு மரியாதையாக வெளியேற வில்லை என்றால், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். என சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.