தேசிய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு; கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகொலை

சர்ச் பாதிரியார்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதுடன், நாகாக்கள் 6 பேர் மற்றும் 14 குகிக்கள் கடத்தப்பட்டனர்.

கவுகாத்தி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய 2 சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இந்த மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் லொய்போல் குல்லன் கிராமத்திற்குள் அதிகாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள் குகி இன நபர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டனர். அதில், கர்ப்பிணி ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார். அவருடைய கணவரையும் அந்த கும்பல் சுட்டு தள்ளியுள்ளது.

தின்மேரி ஹாவோகிப் என்ற அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாவார். இந்த மாவட்டத்தில் குகி மற்றும் நாகா மக்கள் தொகை அதிகம். இந்த தாக்குதலை, முதல்-மந்திரி ஒய்.கே. சிங் கோழைத்தன தாக்குதல் என கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த காட்டுமிராண்டித்தன செயலுக்கு பொறுப்பானவர்களை அரசு தப்ப விடாது என்று கூறினார்.

கடந்த மாதம் 13-ந்தேதி சர்ச் பாதிரியார்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதுடன், நாகாக்கள் 6 பேர் மற்றும் 14 குகிக்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.