தேசிய செய்திகள்

இனி கவலை வேண்டாம்...ஷாப்பிங்கில் வாங்கிய பொருளை சுமக்க கேரி மேன் வந்தாச்சு..எங்கே தெரியுமா?

பண்டிகைக் காலங்களில் அதிகளவில் திருமண ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் பரபரப்பான மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்பவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் பைகளை சுமந்து செல்லும் "கேரி மேன் என்ற புதிய மற்றும் வினோதமான சேவைகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் போன்ற பிரம்மாண்டமான மற்றும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள மார்க்கெட்டுகளில் மக்கள் மணிக்கணக்கில் நடந்து ஷாப்பிங் செய்வது வழக்கம். அப்படி வாங்கும் அதிகப்படியான பொருட்களைக் கைகளில் சுமந்து கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்குச் செல்வது பெரும் சிரமமாக இருக்கும்.

இந்த இன்னலைத் தீர்க்க,"கேரி மேன்" நிறுவனத்தின் மூலம் பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்ட உதவியாளர்கள் உங்களுடன் மார்க்கெட்டிற்கு வருவார்கள். நீங்கள் வாங்கும் அனைத்துப் பைகளையும் அவர்கள் சுமந்து கொள்வார்கள், இதனால் நீங்கள் கைகளில் எந்த எடையும் இல்லாமல் நிம்மதியாக ஷாப்பிங் செய்யலாம்.

இந்த சேவை குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஷாப்பிங் வரும் பெற்றோர்கள் ஆகியோர்க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது.

மேலும் பண்டிகைக் காலங்களில் அதிகளவில் திருமண ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தற்போது இந்த சேவையின் முதற்கட்டமாக டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. விரைவில் சாந்தினி சவுக் போன்ற பிற பகுதிகளிலும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த சேவைக்கு நேரத்தின் அடிப்படையில் மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

30 நிமிட பேக்கேஜ் ரூ.79, 1 மணி நேரம் பேக்கேஜ் ரூ.149 என்ற அடிப்படையிலும் ஒரு நபர் சுமார் 12 கிலோ எடை உள்ள பைகளை சுமப்பர்.

பைகளை சுமப்பது மட்டுமில்லாமல், நீண்ட வரிசைகளில் நிற்பது, வெயில்/மழையிலிருந்து பாதுகாக்கக் குடை பிடிப்பது மற்றும் மொபைல் சார்ஜிங் வசதி போன்ற கூடுதல் வசதிகளையும் இவர்கள் வழங்குகின்றனர்.

பொதுமக்கள் தங்கள் பொருட்களை நம்பி ஒப்படைக்கும் வகையில், இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் காவல்துறை சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், அவர்கள் அனைவரும் பிரத்யேக சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருப்பார்கள்.

இந்த சேவையை பெற கேரி மேன் சர்வீசஸ் என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு மற்றும் கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டெல்லிவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிப்டோ, ஸ்விகி என்ற வரிசையில் இப்போது கேரி மேனும் சந்தையில் நுழைந்துள்ளது. இது போக போக முக்கிய தலைநகரங்களில் விரிவடைய கூடும் என்று நம்பப்படுகிறது.