பெங்களூரு,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளன. இதனால் நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள், உணவகங்கள் இயங்கி வரும் நிலையில், இதுவரை சுமார் 25 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினசரி உணவு தேவைக்காக ஓட்டல்களை நம்பியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில ஓட்டல்கள் விறகு அடுப்பு, மின்சார அடுப்புகள் மூலம் இயங்குகின்றன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கு இன்று சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வீட்டு உபயோக சிலிண்டர்களின் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை வழங்கிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, வணிக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கர்நாடக அரசு இந்த சூழ்நிலையை சமாளிக்க, அத்தியாவசிய தேவைகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும், உணவகங்கள், தங்கும் விடுதிகள், உணவு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றின் தேவை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சிலிண்டர்களாக இருக்கும் பட்சத்தில், தற்போது ஆயிரம் சிலிண்டர்கள் மட்டுமே விநிநோகம் செய்ய முடிகிறது.
இதன் விளைவாக, வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் உணவு நிறுவனங்கள் மூடப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. இது மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு விநியோகத் துறையை சார்ந்துள்ள பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது.
வீட்டு உபயோக எரிவாயு விநியோகத்தைக் கண்காணிக்க ஏற்கனவே ஒரு தகவல் தொழில்நுட்ப அமைப்பு இருந்தாலும், வணிக சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க ஒருங்கிணைந்த தளம் எதுவும் இல்லை.
அதேபோல், பெங்களூருவின் நகர இணைப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, பல ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாக விளங்கும் ஆட்டோக்களுக்கும், ஆட்டோ எல்.பி.ஜி. ஒரு இன்றியமையாத எரிபொருளாகும். இருப்பினும், ஆட்டோக்களுக்கான எல்.பி.ஜி. விநியோகத்தைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த அமைப்பு எதுவும் இல்லாததால், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை இல்லாமல் போகிறது.
மேற்கண்ட பிரச்சனைகளை கணிசமாகத் தணிக்கக்கூடிய 2 எரிவாயு டேங்கர்களை இந்தியா விரைவில் பெறவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. எனவே, கர்நாடக மாநிலத்தின், குறிப்பாக பெங்களூரு நகரின் செயல்பாட்டுத் தேவைகளையும் தனித்துவமான சார்புநிலைகளையும் கருத்தில் கொண்டு, வணிக சிலிண்டர் மற்றும் ஆட்டோ எல்.பி.ஜி. ஆகியவை போதுமான அளவில் ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.