தேசிய செய்திகள்

ஓரிரு நாளில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சித்தராமையா முடிவு?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

பெங்களூரு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.

கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத சூழலில், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரத்தில், கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும் என்றார்.

இந்த சூழலில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடுவதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவரான ஆர்.வி. தேஷ்பாண்டே இன்று கூறும்போது, ராஜினாமா செய்வது என முடிவு செய்து விட்டேன் என்று சித்தராமையா என்னிடம் கூறினார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ஆனால் அவரிடம், ஏன் ராஜினாமா செய்கிறீர்கள்? என நான் கேள்வி எதுவும் கேட்கவில்லை. நீங்களே ஏன் தொடர கூடாது? என வற்புறுத்தவே முயற்சித்தேன் என்றார். ஆனால் அவரோ, கட்சியின் மேலிடத்திற்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன். அதனை நான் மதிக்க வேண்டும் என்றார். இதனால், நாளை அல்லது நாளை மறுநாள் அவர் ராஜினாமா செய்வார் என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.