தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து இன்று விலகுகிறார் சித்தராமையா?

ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்கிறார்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கடந்த 2023-ம் ஆண்டு அமைந்தது. அந்த நேரத்தில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது. முதல்-மந்திரி பதவியில் நீடிக்க இந்த ஒப்பந்தத்தை விட கூடுதலாக 6 மாதங்கள் நீடிக்க காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தது.இதையடுத்து சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து தற்போது 3 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி தனக்க முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் டி.கே.சிவக்குமார் தனது கோரிக்கையை முன்வைத்தார். 5 மாநில தேர்தல் முடிவடைந்த பிறகு இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்று அவரிடம் கட்சி மேலிடம் உறுதியளித்து இருந்தது.

rர்

ராகுல் காந்தி ஆலோசனை

அதன்படி முதல்-மந்திரி சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவருடன் ராகுல்காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் ராகுல் காந்தி, “நீங்கள் 2½ ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக் கொடுப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால் உங்களுக்கு அதை விட கூடுதலாக 6 மாதங்கள் வழங்கியுள்ளோம். அதனால் நீங்கள் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆக வழிவிட வேண்டும். உங்கள் மகனுக்கு உரிய பதவி வழங்குகிறோம். உங்களையும் உரிய மரியாதையுடன் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.ராகுல் காந்தியின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொண்ட சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து சித்தராமையா நேற்று முன்தினம் இரவே பெங்களூரு திரும்பினார். நேற்று சித்தராமையாவை பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் 30-க்கும் ஏற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர்.

அவர்கள், நீங்கள் எக்காரணம் கொண்டும் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், நாங்கள் வேண்டுமானால் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை பெற்று கட்சி மேலிடம் வழங்குகிறோம் என்றனர். இதை ஏற்க மறுத்த சித்தராமையா, நீங்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினால் அது கட்சி மேலிடத்தில் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கூறிய சித்தராமையா, நீங்கள் ஏதாவதுது சொல்ல விரும்பினால் அதை கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் கூறுங்கள் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இன்று ராஜினாமா?

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு அனைத்து மந்திரிகளுக்கும் சிற்றுண்டி கூட்டத்தை தனது வீட்டில் ஏற்பாடு செய்துள்ளார். இதில் தனது ராஜினாமா முடிவை அவர் மந்திரிகளிடம் கூற இருக்கிறார். அதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு மக்கள் மாளிகையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்திக்கும் முதல்-மந்திரி சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.