புதுடெல்லி,
ரூ.12 ஆயிரம் கோடி புதிய நிதிக்கு பதிலாக ஏர் இந்தியா நிர்வாகத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதல் அதிகாரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து 2013-ல் 'விஸ்தாரா' என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கின. அதில் சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் 49 சதவீத பங்குகள் இருந்தன. கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் டாடா குழுமம் கைப்பற்றியது. ரூ.18 ஆயிரம் கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் கடந்த 2024-ல் முழுமையாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், விஸ்தாராவில் தனக்கிருந்த 49 சதவீத பங்கை ஏர் இந்தியாவின் 25.1 சதவீத பங்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாற்றிக்கொண்டது.
இந்த இணைப்பின் போது, புதிய பெரிய ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது 25.1 சதவீத பங்கை உறுதிப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலில் ரூ.2 ஆயிரம் கோடியும், பின்னர் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்காக ரூ.6 ஆயிரத்து 333 கோடியையும் முதலீடு செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டு முடிவில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.
இதனை அடுத்து, நிறுவனத்தை நிலைநிறுத்த ஏர் இந்தியாவில் டாடா நிறுவனம் தனது பங்கான ரூ.10,450 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் இருந்து ரூ.12,450 கோடி புதிய முதலீட்டுக்கு கோரப்பட்டது.
இந்த நிதி உதவி கோரிக்கை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் கென்னத் தியாங் மூலம் ஆட்சேபனைக்கு உள்ளானது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு வெளிநாட்டு விமான நிறுவனத்தை முட்டுக்கொடுத்து நிறுத்த சிங்கப்பூர் அரசின் நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம் இதில் அரசு தலையிடாது என்றும், வணிக ரீதியான நன்மைகளை அடிப்படையாக கொண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாரியமே இந்த முடிவை எடுக்கும் என்றும் தெளிவுபடுத்தியது.
இந்தநிலையில் ஏர் இந்தியாவில் புதிய முதலீடுகளுக்கு பதிலாக நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரத்தை கேட்டு பெற உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனது நஷ்டத்தை குறைப்பதற்கான கடுமையான நிபந்தனைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விதிக்க விரும்புவதாகவும், தற்போதைய ஒரு வாரிய இடத்துக்கு பதிலாக கூடுதல் இடங்களைப் பெற்று வலுவான வாக்குரிமையைப் பெற முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.