நாசிக்,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த அசோக் காரத் என்பவர் வாழ்ந்து வந்தார். தன்னை ஒரு ஆன்மீகவாதி என அடையாளப்படுத்தி கொண்டவர். மேலும் இவர் முன்னாள் வணிக கப்பல் போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றியதால் "கேப்டன் காரத்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.
அசோக் காரத் புனேயை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்றும், அந்த பெண் பார்வதி தேவி என்றும் கூறி ஆசைவார்த்தை கூறி உள்ளார். இந்த பிரபஞ்சம் முழுவதும் நான் சொல்வதை கேட்கும் என கூறி மயக்கி வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு அசோக்குடன் முதலில் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் மாதம், அந்த பெண்ணை சந்திக்க அசோக் காரத் புனே வந்துள்ளார். அங்குள்ள ஒரு விடுதியில் அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை ரகசியமாக படமெடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை காட்டி..காட்டி.. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அவரை பாலியல் கொடுமை செய்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம், அவர் வசாயில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்த பெண்ணை வரவழைத்து, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காட் சாமியாரின் இச்சைகளை தாங்காமல் பொறுத்தது போதும் என பொங்கி எழ முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அந்த பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றம் முதலில் புனேவில் நடந்ததால் மணிக்பூர் போலீசார் புதன்கிழமை அன்று 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்து, மேல விசாரணைக்காக புனேவில் உள்ள ஹடப்சர் காவல் நிலையத்திற்கு விசாரணையை மாற்றினர்.
மணிக்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஹிராலால் ஜாதவ் இது குறித்து தெரிவிக்கையில், குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விரைவில் காட் சாமியார் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து காட் சாமியாரால் பாதிக்கப்பட்ட பல பெண்களும் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல ஆவணங்கள், கோப்புகள், ஒரு டைரி மற்றும் தாள்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மராட்டியத்தில் காட் சாமியார் குறித்த லீலைகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.