விநாயகர் சிலை கரைப்பு (கோப்பு படம்) 
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் பலி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிர முயற்சிக்குப் பிறகு 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு காவல் எல்லைக்குட்பட்ட பெத்தகஞ்சர்லா கிராமத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விநாயகர் சிலை கரைப்பு

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு பகுதியில் உள்ள ஷிரீஷா அறக்கட்டளை அனாதாசிரமத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று (புதன்கிழமை) மாலை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை முடித்துவிட்டு பெத்தகஞ்சர்லா கிராமத்தில் உள்ள நேரேடு செருவு ஏரிக்கு சிலையைக் கரைக்க 8 மாணவர்கள் சென்றுள்ளனர்.

மாணவர்கள் உயிரிழப்பு

மாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், அருகில் சாலை பணிகளுக்காக ஏரியின் உட்பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழி குறித்து அவர்களுக்கு தெரியாததாலும், மாணவர்கள் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றனர். இதையடுத்து நீச்சல் தெரியாத நரசிம்மா (வயது 21), தேஜா (வயது 17), சித்தார்த்தா (வயது 17), கணேஷ் (வயது 18), சுமந்த் ரெட்டி (வயது 17), உதய் கிரண் (வயது 22) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதலமைச்சர் ஏ. அனுமுலா ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடக்கும் போது போதிய பாதுகாப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து படான்செரு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT