தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 50 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தம் - மத்திய அரசு தகவல்

ஒவ்வொரு 6 நாட்களுக்கும் ஒரு லட்சம் வீடுகள் என்ற வேகத்தில் திட்டம் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

'பி.எம். சூர்ய கர்: முப்த் பிஜிலி யோஜனா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 7.94 லட்சம் வீடுகளில் மட்டுமே சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.75 ஆயிரத்து 21 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இது, உலகின் மிகப்பெரிய கூரை சோலார் மின்சக்தி திட்டமாகும்.

தற்போது ஒவ்வொரு 6 நாட்களுக்கும் ஒரு லட்சம் வீடுகள் என்ற வேகத்தில் திட்டம் விரிவடைகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5.06 லட்சம் வீடுகள் பயன்பெற்றுள்ளன. நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 24 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 19 லட்சம் குடும்பங்கள் கட்டணமின்றி மின்சாரம் பெறுகின்றன. உபரி மின்சாரத்தை விற்றதன் மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2025-ம் நிதியாண்டில் ரூ.421 கோடி வருமானம் ஈட்டியுள்ளன. இதுவரை மொத்தம் 14.8 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.