தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து வீரர் உயிரிழப்பு

வாகனத்திற்குள் சிக்கியிருந்த 3 வீரர்களையும் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடாநகர்,

அருணாசல பிரதேச மாநிலம் மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திரங் பகுதியில, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 3 ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ராணுவ வாகனம் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த விபத்தில் வாகனம் முழுமையாக சேதமடைந்தது. படுகாயமடைந்த நிலையில் வாகனத்திற்குள் சிக்கியிருந்த 3 வீரர்களையும் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுரேந்தர் சிங் என்ற வீரர் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.