காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்தார். இதையடுத்து மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சோனியா காந்தியின் புதிய புத்தகம் வெளியானதை தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதான்ஷு திரிவேதி, அவரை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்த சோனியா காந்தி, அதன்பிறகு தேசிய ஆலோசனை குழுவின் தலைவராக பொறுப்பேற்றார். இந்த பதவிக்கு மத்திய மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு, மத்திய மந்திரி அந்தஸ்துடன் கூடிய பதவியை ஏற்றுக்கொண்டார்.பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்து 'சூப்பர் பிரதமராக' ஆனார். உலகில் இதுபோன்ற உதாரணத்தை எங்கும் காண முடியாது. அந்த காலகட்டத்தில் 'சூப்பர் பிரதமர்', 'சூப்பர் மந்திரிசபை' ஆகியவை எவ்வாறு செயல்பட்டன என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்று அவர் தெரிவித்தார்.மேலும், தேசிய ஆலோசனை குழு தலைவர் பதவிக்கு மத்திய மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டது மற்றும் அது ஆதாயம் தரும் பதவி தொடர்பான விதிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
சோனியா காந்தி தனது புதிய புத்தகத்தில், 2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கியுள்ளார். தனது குழந்தைகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என்று தன்னிடம் வலியுறுத்தியதாகவும், இறுதியில் தனது உள்மனதின் குரலுக்கு செவிசாய்த்து மன்மோகன் சிங்கை பிரதமராக முன்மொழிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது