தேசிய செய்திகள்

சோனியா, ராகுல், கார்கே இன்று சென்னை வருகை; மு.க. ஸ்டாலினை சந்திக்க திட்டம்..?

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில், மும்பையில் சரத் பவாரையும் சந்தித்து ஆதரவு கோரப்படும் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு வருகை தருகின்றனர். இதில், மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (30-ந்தேதி) கூடவுள்ளது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில கட்சிகள், ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளன.

பவார் கட்சி ஆதரவு

இதன்படி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இது இந்தியா கூட்டணியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய் வதத்திவார் கூறும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிகாரப்பசியுடன் உள்ளது. கடந்த காலத்திலும் மக்களை முதுகில் குத்தும் வரலாற்றை கொண்டவர் பவார் என்று குற்றச்சாட்டாக கூறினார்.

நாங்கள் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பினோம். ஆனால், ஜனநாயக அழிப்புக்கு பங்காற்றியவர்கள் பற்றிய வரலாறு எழுதப்படும்போது, அந்த பட்டியலில் பவாரின் பெயர் நிச்சயம் இருக்கும் என்றும் கூறினார்.

எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அமோல் கோலே கூறும்போது, மசோதாவை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தி.மு.க. ஆதரவு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, தி.மு.க.வும் ஆதரவை தெரிவித்து உள்ளது. இதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வடமாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தை குறைத்திருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்து விட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள்.

அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்து விட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது என்று பேசினார்.

கார்கே, சோனியா சென்னை வருகை

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னைக்கு வருகை தருகிறார். அவருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு வருகை தருகின்றனர். அவர்களுடன் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் இன்று சென்னை வருகிறார். இதில், மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தலாம் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, இந்த விவகாரத்தில் மும்பையில் சரத் பவாரையும் சந்தித்து ஆதரவு கோரப்படும் என்று கூறப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இன்று ஒரு நாளே மீதமுள்ள நிலையில், ஸ்டாலின் மற்றும் பவார் ஆகியோரை சந்தித்து ஆதரவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT