லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பக்தி (வயது 12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் மூவரும் கொரியன் வீடியோ கேமுக்கு அடிமையாகியிருந்தனர். வீட்டில் எப்போதும் செல்போனை கையிலே வைத்துக்கொண்டு வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்ததால், இனி அதனை விளையாடக் கூடாது என்று அவர்களின் பெற்றோர் கண்டித்து தடை விதித்துள்ளனர்.
இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த மூன்று சிறுமிகளும் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்துள்ளனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் மூன்று பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிறுமிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சிறுமிகள் தற்கொலை செய்வதற்கு முன்பாக கைப்பட ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதில்,“இந்தக் கடிதத்தில் இருப்பதை முழுவதுமாக படியுங்கள். அப்பா, எங்களை மன்னித்து விடுங்கள். கொரியன் கேமை விட்டு எங்களால் வெளியே வர முடியாது. கொரியா தான் எங்களின் வாழ்க்கை. அது இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. எங்களின் வாழ்க்கையை நாங்கள் முடித்துக்கொள்கிறோம்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமிகளின் தற்கொலைக்கு வீடியோ கேம் தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.