தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்பி வைத்தது தென் கொரியா

தென் கொரியாவில் இருந்து 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் தென் கொரியாவில் இருந்து இந்தியாவிற்கு இன்று அதிகாலை வந்த விமானத்தில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக கடந்த 8 ஆம் தேதி, தென் கொரியாவிடம் இருந்து 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. மேலும் தொடர்ந்து இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை அனுப்ப தயாராக உள்ளதாகவும் தென் கொரியா அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.