தேசிய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய சபாநாயகர் உத்தரவு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை காங்கிரஸ் கட்சியினர் மக்களவை செயலகத்தில் வழங்கினர். இந்த நோட்டீசில் பிப்ரவரி 2026 என்பதற்கு பதிலாக 4 இடங்களில் பிப்ரவரி 2025 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், விதிகளின்படி இந்த நோட்டீசை மக்களவை செயலகம் நிராகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மக்களவை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:-

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தில் பிப்ரவரி 2025 நிகழ்வுகள் 4 முறை குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் விதிகளின்படி அது நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குறைபாடுகளை சரிசெய்து அடுத்த நடவடிக்கையைத் தொடருமாறு சபாநாயகர் செயலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

விதிகளின்படி விரைவான நடவடிக்கை எடுக்க ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்டம் தொடங்கிய பிறகு இந்த அறிவிப்பு பட்டியலிடப்படும். திருத்தப்பட்ட அறிவிப்பைப் பெற்ற பிறகு, பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி அது உடனடியாக ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா நோட்டீஸ் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை தனது பொறுப்பில் இருந்து விலகி இருக்க சபாநாயகர் ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார்.