தேசிய செய்திகள்

பாகிஸ்தான், மேற்கு வங்காளம்,எல்லைகளில் ஊடுருவலை தடுக்க சிறப்பு திட்டம்: அமித்ஷா

இந்தியாவின் மக்கள் தொகை அமைப்பை செயற்கையாக மாற்றுவதற்கான சதிச்செயலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.

கொல்கத்தா,

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் ஊடுருவல் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது. வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவும் மக்களால் மேற்கு வங்காளத்தின் மக்கள் தொகை அமைப்பே மாறியுள்ளது.

எனவே இந்த ஊடுருவலை முற்றிலும் அழிப்போம் என அங்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜனதா உறுதியளித்து இருந்தது. தற்போது அங்கே ஆட்சியமைத்துள்ள அந்த கட்சி, இதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்த இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையின் முதல் இயக்குனர் ஜெனரலான ருஷ்தம்ஜியின் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாட்டில் ஊடுருவியிருக்கும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் நாங்கள் கண்டுபிடித்து அவர்களை இந்தியாவுக்கு வெளியே திருப்பி அனுப்புவோம்.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடனான 6 ஆயிரம் கி.மீ. எல்லைப்பகுதியை ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றுவோம். இதற்காக ஸ்மார்ட் எல்லை திட்டம் அமல்படுத்தப்படும்.

அடுத்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் ஒரு வலுவான பாது காப்பு வலையமைப்பை உருவாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் திட்டத் துக்கு தொழில்நுட்பம், டிரோன்கள், ரேடார்கள் மற்றும் திறன்மிகு கேமராக்கள் துணைபுரியும். இது ஊடுருவ முடியாத ஒரு எல்லையை உருவாக்க உதவும்.

இந்தியாவின் மக்கள் தொகை அமைப்பை செயற்கையாக மாற்றுவதற்கான சதிச்செயலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க வேண்டும். பா.ஜனதா தலைமையிலான தற்போதைய திரிபுரா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநில அரசுகள் எல்லைக்கு அப்பால் இருந்து எந்த ஊடுருவலும் இருக்கக்கூடாது என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளன.

எல்லை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் மத்திய உள் துறை அமைச்சகம் விரைவில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உயர் திறன் கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.