புதுடெல்லி,
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க 3 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இதனையடுத்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்த பிறகு, அலுவல்கள் தொடங்கியது.
இந்நிலையில் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் இஸ்லாமிய பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தநிலையில், இடஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டில் மதம் ம சார்ந்த வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது என்றும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பது என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
தொடர்ந்து அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்திய ஜனநாயகத்தை முடக்கும் வகையிலும் அடிப்படை அரசியலமைப்பை தகர்த்து உரிமைகளை பறிக்கும் வகையிலும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
அவர் பேசும்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறுக்கிட்டதால் அவையில் சலசலப்பு நிலவியது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என அமித்ஷா பதில் அளித்தார்.
தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கூறுகையில், “சாண்ட்விச் போல 3 மசோதாக்களை ஒன்றாக கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை திட்டவட்டமாக, சமரசம் இன்றி தி.மு.க. எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெற்று வருகிறது.
இதில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கருப்புக் கொடியேற்றி, மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கருப்புக் கொடியேற்றி, மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்தினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடியேற்றும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.