மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 208 இடங்களை வென்றது. 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியை வீழ்த்தி, பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜிக்கு இந்த தோல்வி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்வியையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சொவன்தேப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, மம்தா பானர்ஜி அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமார் 60 பேர், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டுள்ளனர். இவர்கள் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என கூறி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “நாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்பதற்கு அங்கீகாரம் கோரம் கடிதம் தயாராக உள்ளது. மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் ரதிந்திர போஸ் இடம் அந்த கடிதத்தை நாங்கள் ஒப்படைப்போம்” என்றார். இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹாவை திரிணமுல் காங்கிரஸ் தலைமையகம் கட்சியில் இருந்து நீக்கியது.
இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த ரிதப்ரதா பானர்ஜி , தற்போது மம்தா பானர்ஜி தலைமையை எதிர்த்து ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு ஆதரவாக 60 எம்எல்ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, 59 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட மனு சட்டசபை செயலரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ரிதப்ரதா பானர்ஜி பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா நேரில் சென்று வழங்கினர். மேலும், விரைவில் இன்னொரு எம்எல்ஏ-வும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
சட்டசபை விதிகளின்படி, மொத்த எம்எல்ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.