புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கிய ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் பெருமையை பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
இதில் பங்கேற்க, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா இன்று இந்தியாவுக்கு வருகை தருவார் என இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த அறிக்கையில், உலகளாவிய தெற்கு பகுதியில் நடைபெறும் முதல் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு இதுவாகும். பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றை புதிதாக உருவெடுத்து வரும் தொழில் நுட்பங்கள் மறுவடிவமைத்து வரும் சூழலில், அதில் இலங்கையும் பங்கு கொள்வது என்பது இந்தியா மற்றும் இலங்கை இடையேயான நட்புறவின்ஆழம் மற்றும் முன்னுரிமையை பிரதிபலிக்கிறது.
புதிய கண்டுபிடிப்பை உறுதி செய்வதற்கான நம்முடைய பகிரப்பட்ட ஈடுபாடானது, அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்பான மற்றும் மக்களை மையப்படுத்திய ஒன்றாக தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.