தேசிய செய்திகள்

பிரிக்ஸ் மேடை தயாராக உள்ளது... உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்கிறோம்; அமித்ஷா

பிரிக்ஸ் உச்சிமாநாடு டெல்லியில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

டெல்லி,

பிரிக்ஸ் மாநாட்டு மேடை தயாராக உள்ளதாகவும், உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாடு

இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பாக பிரிக்ஸ் அமைப்பு உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.

இதனிடையே, 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சிமாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. "வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இம்மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர்.

அமித்ஷா வரவேற்பு

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டு மேடை தயாராக உள்ளதாகவும், உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதாகவும் உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2026ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டு மேடை தயாராக உள்ளது.

உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை துரிதப்படுத்தவும், சிறந்த உலகத்திற்கான பொதுவான செழிப்பை மேம்படுத்தவும் விவாதித்து நடவடிக்கை எடுக்க வந்துள்ள உலகத்தலைவர்களை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அன்புடன் வரவேற்கிறது. ஒருங்கிணைந்து நாம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT