தேசிய செய்திகள்

புலி தாக்கியதில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

ஆபத்து நேரத்தில் பலமுறை அழைத்தும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

போபால்,

மத்தியப்பிரதேசம் மாநிலம் பந்தவ்கர் வனப்பகுதியை அருகே உள்ள கிராமத்தின் கேர்வா டோலா பகுதியில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்திற்குள் நுழைந்த புலி ஒன்று அங்கு உள்ளவர்களை தாக்கியுள்ளது. இதில் பூல் பாய் பால் (வயது 40) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ந்து புலித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ஆபத்தான நேரத்தில் பலமுறை அழைத்தும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், புலி இன்னும் அருகிலேயே சுற்றித் திரிவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவும் மக்கள் காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் அனுமதி மறுத்து தடுத்தனர். இந்த தொடர் போராட்டங்களால், புலியைப் பிடிப்பதற்கான மீட்புப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து பந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அனுபம் சஹாய் கூறுகையில், “புலி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றும் நால்வர் காயமடைந்துள்ளனர். கிராம மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவதற்கும், குடியிருப்புப் பகுதிக்குள் இருக்கும் புலியைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த நான்கு பேருக்கும் அரசின் செலவில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.