மத்திய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல - அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பாகும். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசிடம் குவிக்கப்படுவது, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது.
மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்தியாவின் வலிமையே அதன் கூட்டுறவு கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை மதிப்பதில் தான் உள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் 'மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' (Inter-State Council) போன்ற ஒரு வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.