சண்டிகர்,
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது மாணவி ஆயிஷா, தேசிய அளவிலான கணித ஒலிம்பியாட் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்று, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நாசா விண்வெளி மையத்திற்கு முழு நிதியுதவியுடன் கூடிய கல்விச் சுற்றுலா செல்லும் வாய்ப்பை வென்றுள்ளார்.
ஹரியானா மாநிலம், மகேந்திரகர் மாவட்டம் நாரநௌல் அருகே உள்ள பாக்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா (வயது 10). இவர் அப்பகுதியில் உள்ள 'கர்மபூமி விங்ஸ்' பள்ளியில் தற்போது 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பிரபல கல்வி நிறுவனமான மிட்சியூர் நடத்திய "மிட்சியூர் ஒலிம்பியாட் மாஸ்டர்ஸ்" என்ற தேசிய அளவிலான கணிதப் போட்டியில் பங்கேற்றார். நாடு முழுவதிலும் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட போட்டியில், தொடக்கம் முதலே ஆயிஷா தனது அபார கணிதத் திறமையை வெளிப்படுத்தினார்.
பள்ளி அளவில் தொடங்கிய இப்போட்டியில், அடுத்தடுத்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்து தேசிய அளவிலான இறுதிச் சுற்றுக்கு ஆயிஷா தகுதி பெற்றார். இதன் இறுதிப் பகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடுமையான நேர்காணல் சுற்று நடைபெற்றது. இதில் 3 பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழு ஆயிஷாவிடம் கணிதம் மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து மிகக் கடினமான கேள்விகளைக் கேட்டனர்.
அத்தனை கேள்விகளுக்கும் எவ்வித பதற்றமும் இன்றி, மிகத் துல்லியமாகவும் வேகமாகவும் பதிலளித்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினார் ஆயிஷா. இந்த ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 60 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், நாசா கல்விச் சுற்றுலா செல்வற்காக ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து வெறும் 4 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஹரியானா மாநிலத்தின் சார்பாக தேர்வான ஒரே சிறுமி ஆயிஷா.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரைச் சேர்ந்த கௌரங்கி சர்மா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப் ஜெயின் மற்றும் ஜெய்பிரகாஷ் பாண்டே ஆகியோரும் ஆயிஷாவுடன் நாசா செல்ல தேர்வான இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷாவின் தந்தை ராஜ்குமார், இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தாய் சினேலதா ஒரு இல்லத்தரசி. மகளின் இந்த அரிய சாதனை குறித்துப் பேசிய தந்தை ராஜ்குமார், "தொடக்கத்தில் இது ஒரு சாதாரண பள்ளித் தேர்வு என்றுதான் நினைத்தோம். ஆனால், அவள் ஒவ்வொரு சுற்றிலும் வென்று தேசிய அளவுக்கு முன்னேறியபோதுதான் அவளது அசாத்திய திறமை எங்களுக்குப் புரிந்தது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தினமும் பள்ளி முடிந்து வந்த பிறகு, சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை பிரத்யேகப் பயிற்சிகளிலும், சுய படிப்பிலும் ஆயிஷா ஈடுபடுவதாக அவரது தாயார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவரான ஆயிஷா, படிப்பில் மட்டுமல்லாது வீட்டு வேலைகளிலும் தனது பெற்றோருக்கு உதவி வருகிறார்.
மிகக் குறைந்த வயதில் நாசா விண்வெளி மையத்திற்குச் செல்லத் தேர்வாகியுள்ள ஆயிஷாவிற்கு, அவரது கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாடப்புத்தகங்களைத் தாண்டி, விண்வெளி அறிவியல் உலகை நேரில் அனுபவிக்கப் போகும் ஆயிஷாவின் இந்த சாதனை, கிராமப்புற மாணவர்களுக்குப் பெரிய தூண்டுகோலாக அமைந்துள்ளது.