தேசிய செய்திகள்

ஜந்தர் மந்தரில் கல் வீச்சு: 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து நேற்று மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிலநிமிடங்களில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினர் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள்போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு போலீஸ் கமிஷனர் அனில் சுக்லா தலையில் பலத்த காயம் அடைந்தார். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.

கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

கல்வீச்சு காரணமாக ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் தள்ளுமுள்ளும், குழப்பமும் நிலவியது. வன்முறையை ஒடுக்கவும், நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். வன்முறை கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து லேசான தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரத்திற்குள் ஒட்டுமொத்தப் பகுதியையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய, சம்பவ இடத் தில் பதிவான வீடியோ காட்சிகள் மற்றும் ஆதாரங்களை போலீசார் தீவிர மாக ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பின்னர் நடந்த இந்த திடீர் வன்முறை டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.