ரெயில் மீது கல்வீச்சு 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு தாக்குதல்; 3 ஏசி பெட்டிகளிலன் ஜன்னல்கள் நொறுங்கின

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

மும்பை,

மும்பையில் ஓடிக்கொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது.

கல்வீச்சு தாக்குதல்

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் மராட்டியத்தில் போர்கேடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, தண்டவாளத்தின் ஓரங்களில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென ரெயிலை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பயணிகள் அலறல்

திடீரென கற்கள் ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே விழுந்ததால், ரெயிலுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் ரெயிலுக்குள் ஒட்டுமொத்தமாக பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது. அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர சம்பவத்தில் உள்ளே இருந்த பயணிகளுக்கு எந்தவித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போர்கேடி - சிந்தி ரெயில்வே பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏசி பெட்டிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் சம்பவங்கள்

ரெயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழும் இந்த பதைபதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக ரெயில்கள் மீது கல் எறியும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையேயும் ரெயில் பயணிகளிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT