தேசிய செய்திகள்

அபுதாபியில் நீட் தேர்வு மையம்.. என்.டி.ஏ.வுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

நீட் தேர்வு, நேரம் மற்றும் மன அமைதியை பறிக்கும் ஒரு கொள்ளை செயல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாக்பூர் மாணவனுக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவன், நீட் மறுதேர்விற்கு ஒரு மாதமாக தயாராகி வந்தான். தேர்வுக்காக நேற்று அவன் தனது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தான். அவனது தேர்வு மையம் அபுதாபியில் அமைந்திருந்தது.

அவனிடம் பாஸ்போர்ட் இல்லை, அவனை வெளிநாடு அனுப்ப குடும்பத்தில் பணம் இல்லை, இப்போது நேரமும் இல்லை. அவன் இரவு முழுவதும் அழுதுகொண்டே தேர்வை எழுத மறுக்கிறான். இது என்ன மாதிரியான மன அழுத்தம், உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?

இது எப்படி நடந்தது..? எந்தவொரு மாணவனும் தங்கள் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை என்று புகார் வந்திருக்க கூடாது. தேசிய தேர்வு ஆணையம் (NTA) உண்மையில் நாட்டின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.

ஒரு மாணவனின் சொந்த ஊரில் தேர்வு மையத்தை வழங்க முடியாமல், அதற்கு பதிலாக அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஒரு அமைப்புக்கு, தேர்வுகளை நடத்த எந்த உரிமையும் இல்லை.

இதைத்தான் நான் கோட்டாவில் சொன்னேன். இது இனி ஒரு கல்வி முறை அல்ல. இது ஒரு முழு தலைமுறையின் பணம், நேரம் மற்றும் மன அமைதியை பறிக்கும் ஒரு கொள்ளை செயல்.

நம் மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்துங்கள். அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான, பொறுப்பான மற்றும் பதில் சொல்ல கடமைப்பட்ட ஒரு கல்வி முறையும் தேர்வு அதிகார அமைப்பும் கிடைக்க வேண்டும் - அதை அவர்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநர் அபிஷேக் சிங், உடனடி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தினார்.

இதன்படி, ஹால் டிக்கெட்டில் அபுதாபியில் தேர்வு மையம் என குறிப்பிடப்பட்டு இருந்த தவறை தேசிய தேர்வு மையம் ஒப்புக்கொண்டது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நடந்துவிட்டது என்றும், மாணவர் அபுதாபிக்கு செல்ல வேண்டாம் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், தனது சொந்த ஊரான நாக்பூரிலேயே மாணவருக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து, புதிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.