புவனேஷ்வர்,
ஒடிசாவில் மழை பெய்ய வேண்டி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மழை வேண்டி நூதன வழிபாடு செய்வது என்பது வாடிக்கையான ஒன்றுதான். முதலில் விலங்குகளுக்கு நடைபெற்ற திருமணங்கள் நாளடைவில் கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் என்ற ரீதியில் ’வளர்ச்சி’ பெற்றது. தற்போது அதன் அடுத்த கட்டமாக ஒடிசாவில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. பருவமழை தொடங்காக போதிலும் மழை பெய்யாததால் மக்கள் கவலையில் உள்ளனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்று கிராம மக்கல் நம்புகிறார்கள். அதன்படி ஜதின் கதுவா (வயது 29) கலந்தி நாயக் (வயது 27) என்ற வாலிபர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முன்வந்தனர்.
நேற்று முன் தினம் மாலை மணமகன் கோலத்தில் இருந்த ஜதின், திருமண ஊர்வலம் நடைபெற உள்ள சித்தேஸ்வரி கோவிலுக்கு காரில் சென்றடைந்தார். கலந்தி அங்கு மணமகள் கோலத்தில் தயாராக இருந்தார். வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்களுக்கு மத்தியில் திருமண ஊர்வலம் நிறைவடைந்தது.
அதன்பிறகு கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் உணவு உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
லட்சுமணன் கதுவா என்பவர் மணமகனின் தந்தையாகவும் மணகோபிந்த் நாயக் என்பவர் மணமகளின் தந்தையாகவும் நடித்தனர். உணவுக்கு பிறகு திருமண சடங்குகள் நிறைவடைந்தன. இந்த சடங்கின்படி, தம்பதியினர் ஒருநாள் முழுவதும் ஒன்றாக தங்கி இருந்தனர். பின்னர் ஜதின் மற்றும் கலந்தி தனித்தனியாக பிரிந்து சென்றனர்.