நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான தீர்மானம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: "வினாத்தாள் கசிவு என்பது சாதாரண பிரச்சினை அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த மிகுந்த வேதனையான விஷயம். கடந்த இரண்டரை மாதங்களில் இதைத் தடுக்க பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஒரு கல்வியாண்டையும் இழக்கக் கூடாது என்பதால், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வுகளை உடனடியாக நடத்த அரசு முழு ஆற்றலுடனும் செயல்பட்டது
வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். அதற்கான ஒப்புதல் நேற்று நள்ளிரவில் வழங்கப்பட்டது.
வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அமைச்சர்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகு இறுதி வடிவம் அளிக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரண்டாவது வார கூட்டத்தொடர் தொடங்கும் திங்கள்கிழமை , அதற்கான மசோதாவை விரைவாக நிறைவேற்ற முயற்சிப்போம்" என்றும் பிரதமர் மோடி கூறினார்.இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் முக்கிய கோரிக்கை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே என மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையில், மத்திய அரசு கல்வித்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்களையும் அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக டி.கே. அனில் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) சட்டம், 2024-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க டெல்லியில் தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் புதிய நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றப்படும். சட்டவிரோத முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.இந்த புதிய விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதியாக அனு குரோவர் பாலிகாவை நியமித்து, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா உத்தரவிட்டுள்ளார்.