தேசிய செய்திகள்

காதலனை திருமணம் செய்ய பிடிவாதம்: தூங்கிக்கொண்டிருந்த மகளை கொன்று உடலை எரித்த தந்தை கைது

கல்யாணி காதலனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக தந்தையிடம் கூறினார்.

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், நார்மூர் அடுத்த உம்மியை சேர்ந்தவர் ஆதி கைலாஷ். இவருக்கு 3 மகள்கள். ஒரு மகன் இருந்தனர்.

இவரது 3-வது மகள் கல்யாணி (வயது 19). இரண்டாவது மகளுக்கு திருமணமாகாத நிலையில் நல்ல வரன் கிடைத்ததால் கல்யாணிக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காதல்

கல்யாணி தனது தந்தையிடம் ரோஹித் என்ற வாலிபரை காதலிப்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்தார். இதனை கேட்ட ஆதி கைலாஷ் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். உங்களுடைய சகோதரிக்கு இன்னும் திருமணமாக வில்லை. நீ காதல் திருமணம் செய்தால் குடும்பத்தின் ஒட்டுமொத்த கவுரவமும் கெட்டுவிடும் என மகளிடம் தெரிவித்தார். கல்யாணி காதலனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக தந்தையிடம் கூறினார்.

இந்த நிலையில் நேற்று இரவு தூங்கி கொண்டு இருந்த மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் மகளின் பிணத்தை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மேலும் உறவினர்களுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் அதிகாலை மகளின் பிணத்தை எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரித்து விட்டார்.

கைது

இதனை அறிந்த உள்ளூர் மக்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதி கைலாசை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மகள் காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றதால் கொலை செய்ததாக தெரிவித்தார். போலீசார் ஆதி கைலாசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT