கோழிக்கோடு,
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மாணவர்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக ஆசிரியர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் தாமரசேரி போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து மாணவரிடம் விசாரித்தனர். இதில் மாணவரது நண்பரின் வளர்ப்பு தந்தை, கள்ளச்சாராயம் அடைத்த பாட்டிலை மாணவரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நபரின் வீட் டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், வீட்டில் 28 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிக்கு தண்ணீர் பாட்டிலில் கள்ளச்சாராயம் கொண்டு வந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.