கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

14 மணி நேரம் லிப்டுக்குள் சிக்கி தவித்த மாணவி: பல்கலைக்கழகத்தில் நடந்த பரபரப்பு

மின்தடை ஏற்பட்டதால், 5-வது மற்றும் 6-வது தளங்களுக்கு இடையே லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டது.

புனே,

புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடை காரணமாக, மாணவி ஒருவர் 14 மணிநேரம் லிப்டுக்குள் சிக்கித்தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவழியில் நின்ற லிப்ட்

மராட்டிய மாநிலம், புனே லோனி கல்போர் பகுதியில் எம்.ஐ.டி. கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வகோலியை 19 வயது இளம்பெண் ஒருவர் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, வகுப்புகள் முடிந்ததும் தனியாக லிப்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டதால், 5-வது மற்றும் 6-வது தளங்களுக்கு இடையே லிப்ட் நடுவழியில் நின்றுவிட்டது.

செல்போன் 'சுவிட்ச் ஆப்'

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கதவை தட்டியும், சத்தம் போட்டும் உதவிக்கு அழைத்து பார்த்தார். இதனிடையே, தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், 'ஹலோ' என்று அவர் சொன்ன அடுத்த நொடியே இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதால், வெளியுலகத்துடனான கடைசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

யாரும் கவனிக்கவில்லை

இதற்கிடையே, மகளை தொடர்பு கொள்ளமுடியாமல் பதறிப்போன பெற்றோர், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், பல்கலைக்கழக ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து விடிய விடிய பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தேடினர். ஆனால், அந்த மாணவி லிப்டுக்குள் சிக்கியிருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

மயங்கிய நிலையில்

இந்தநிலையில், மறுநாள் காலை 6 மணியளவில் மின்சார சேவை சீரானதை தொடர்ந்து லிப்ட் மீண்டும் இயங்க தொடங்கியது. அப்போதுதான், உள்ளே மாணவி மயங்கிய நிலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

சுமார் 14 மணிநேரம் உணவு, தண்ணீர் இன்றி லிப்டுக்குள் தவித்த அந்த மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT