தேசிய செய்திகள்

முதல்-மந்திரியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்து, உரையாடிய மாணவி தற்கொலை; ஆந்திராவில் அதிர்ச்சி

நிகழ்ச்சி முடிந்த பின்னர், மாணவ மாணவிகளுடன் முதல்-மந்திரி ஒன்றாக மதிய உணவும் சாப்பிட்டார்.

அமராவதி

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்து, பேசிய மாணவி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் பொலாவரம் மாவட்டத்தில் ராம்பசோதாவரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பெரிய அளவில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்று நடந்தது.

இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் முர்ரம் ஷிவானி என்ற 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கலந்து கொண்டு மேடையில் பேசினார். நன்றாக படிக்க கூடிய மாணவியான ஷிவானியின் பேச்சில் அனைவரின் கவனமும் திரும்பியது.

மதிய உணவு

கடினமாக உழைத்து, அடுத்த வருடம், ஷைனிங் ஸ்டார் என்ற விருது பெற வேண்டும் என்று அவர் அப்போது, விருப்பம் வெளியிட்டார். அவர் பேசி முடித்ததும், மாணவியை அழைத்து மேடையிலேயே தன்னுடன் ஒன்றாக அமரும்படி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், மாணவ மாணவிகளுடன் முதல்-மந்திரி ஒன்றாக மதிய உணவும் சாப்பிட்டார். இந்த நிலையில், அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், மரணத்திற்கான காரணம் பற்றி முழுமையாக விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.