புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியநிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 3 நாட்களாக 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த சூழலில், மாணவர் போராட்டத்தையடுத்து தொடர்ந்து நான்காவது நாளாக டெல்லியில் இன்றும் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன்படி லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜண்டேவாலன் மற்றும் புதுடெல்லி ஆகிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
அதே சமயம் ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் வழக்கம்போல் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் திறக்கப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசுடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால் நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்திருந்தது. மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.