நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேட்டை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் தொடர் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை கலைக்க போலீசார் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் போராட்டத்தில் பங்கேற்ற சாஹில் லோச்சாப் என்ற இளைஞரின் கண் மற்றும் வயிற்றுப் பகுதியில் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன. இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதல் தொடர்பாக சாஹில் லோச்சாப் டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், அவரது புகார் ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், சாஹில் லோச்சாப் உடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.பெல்லட் குண்டு தாக்குதல் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். பின்னர் போலீஸ் நிலையத்தின் வாயிலில் அமர்ந்து ராகுல் காந்தியும், சாஹில் லோச்சாப்பும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், குமாரி செல்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்களும் ராகுல் காந்தியின் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.காலை முதல் தொடர்ந்து நடைபெற்ற தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, ராகுல் காந்தியின் கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து சாஹில் லோச்சாப் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதாவின் 118 மற்றும் 125-வது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையின் நகல் புகார்தாரர் சாஹில் லோச்சாப்பிடம் வழங்கப்பட்டது.இதையடுத்து, ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.