கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தரமற்ற உணவு விநியோகம்: ரெயில்வே உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம்!

ரெயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய ரெயில்வேயில் ஆண்டுதோறும் சுமார் 58 கோடி உணவுப் பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

புதுடெல்லி,

ரெயில்களில் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சமையல் பெட்டிகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரெயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.

கடுமையான நடவடிக்கைகள்

இந்தியாவில் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையல் கூடங்களின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பு போன்ற புகார்கள் மீது ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது. விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட உரிமதாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தல் மற்றும் விநியோகம் செய்பவர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.

மேலும், ரெயில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தரமற்ற உணவு விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சமையல் பெட்டிகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.

புகார்களின் சதவீதம் குறைவு

ரெயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய ரெயில்வேயில் ஆண்டுதோறும் சுமார் 58 கோடி உணவுப் பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் உணவின் தரம் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை 0.0008 சதவீதம் மட்டுமே என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகள்

உணவின் தரத்தை மேலும் உயர்த்த ரயில்வே வாரியம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றன. ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் முக்கிய சமையல் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சமையல் முறைகள் நேரலையாகக் கண்காணிக்கப்படுகின்றன.

பயணிகள் ரெயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, பிஓஎஸ் இயந்திரங்கள், யுபிஐ மற்றும் கியூஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உணவுப் பொட்டலங்களின் தரம் மற்றும் எடையை உறுதி செய்யத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.