முதியவர் 
தேசிய செய்திகள்

ஆயுள் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்டு

கொலை வழக்கில் கைதான முதியவருக்கு, சுப்ரீம் கோர்ட்டு 2024-ம் ஆண்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 105 வயது முதியவரை, மனிதாபிமான அடிப்படையில் சுப்ரீம் கோர்டு நிரந்தரமாக விடுதலை செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆயுள் தண்டனை

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசிக் மண்டல் (வயது 105). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 1988-ம் ஆண்டு நிலத்தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராசிக் மண்டலுக்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தாத்தாவுக்கு ஜாமீன்

இதை எதிர்த்து கொல்கத்தா, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ராசிக் மண்டல், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2024-ம் ஆண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நிரந்தர விடுதலை

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மனுதாரருக்கு தற்போது 105 வயது ஆகிறது. இந்த வயதில் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப முடியாது. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நிரந்தரமாக்கப்பட்டு, அவர் சிறையில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகிறார்" என்று தீர்ப்பு அளித்தனர்.