சுப்ரீம் கோர்ட்டு  
தேசிய செய்திகள்

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

6 எம்.எல்.ஏ.க்கள்

சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ராஜினாமா செல்லும்

இதனைத் தொடர்ந்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், தகுதி நீக்க மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் சபாநாயகருக்கு உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 190(3)(b) பிரிவைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதன் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான தகுதி நீக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதாக வாதிடப்பட்டது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சட்டரீதியான குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிய விவகாரத்தில் குதிரை பேரம், பணம் உள்ளிட்ட ஆதாயங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, ஒருவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராகப் பொறுப்பேற்பது அரசியல் நடைமுறையின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிட்டார். மேலும், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தையும், குற்றச்சாட்டுகள் தொடர்பான காவல்துறை விசாரணையையும் தனித்தனியாக அணுக வேண்டும் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

SCROLL FOR NEXT