புதுடெல்லி,
மத நம்பிக்கைகளின் பெயரில் விலங்குகளை பலியிடுவதற்கு தடைகோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
கோவில்கள் மற்றும் மதச் சடங்குகளின்போது விலங்குகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஸ்ருதி பிஸ்ட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதச் சடங்குகளுக்காக விலங்குகளைக் கொல்வதற்கு விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் பிரிவு 28 வழங்கியுள்ள விதிவிலக்கை நீக்க வேண்டும்.
மதத்தின் பெயரால் விலங்குகளை பலியிடுவதா? மதத்தின் பெயரால் விலங்குகள் பலியிடப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகளுக்கும் வாழ்வதற்கான உரிமை இருப்பதால், அவற்றைப் பலியிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-க்கு எதிரானது என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடந்த மார்ச் மாதம் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கோரியிருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.