தேசிய செய்திகள்

‘வந்தே மாதரம்’ வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு: 27-ந் தேதி விசாரணை

டெல்லி ஐகோர்ட்டில் உள்ள மனுவை சுப்ரீம்கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள 'வந்தே மாதரம்' தேசிய பாடலுக்கு தேசிய கீதத்துக்கு சமமான அந்தஸ்து அளிக்கக்கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 27-ந் தேதி விசாரணை நடக்கிறது.

'வந்தே மாதரம்' தேசிய பாடலுக்கு தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு இணையான அந்தஸ்து அளிக்கக்கோரி. டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ளது.

வந்தே மாதரம்

இதற்கிடையே. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வந்தே மாதரம் பாடல், நமது சரித்திரம், இறையாண்மை, ஒற்றுமை, பெருமை ஆகியவற்றின் அடையாளம். எந்த குடிமகனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதை அவமரியாதை செய்தால், அது சமூக விரோத செயல் மட்டுமின்றி, நமது உரிமைகளை அழிப்பதாக அமைந்து விடும்.

27-ந் தேதி விசாரணை

எனவே, ஒவ்வொரு குடிமகனும் அத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும். வேறு யாராவது வந்தே மாதரம் பாடலை அவமதிக்க முயன்றால், அதை தடுக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதேபோன்ற ஒரு ரிட் மனு நிலுவையில் இருப்பதால், டெல்லி ஐகோர்ட்டில் உள்ள மனுவை இங்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 27-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT